மக்களவைத் தேர்தல் 2024-ன் போது, தேர்தல் ஆணையத்தின் சி விஜில் செயலி தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்துப் புகார் அளிக்க மக்களின் கைகளில் மிகவும் பயனுள்ள கருவியாக உருவெடுத்துள்ளது.
பொதுத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டதிலிருந்து, 2024 மே 15, வரை இந்த செயலி மூலம் 4.24 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 4,23,908 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 409 புகார்கள் பரிசீலனையில் உள்ளன. ஏறக்குறைய 89 சதவீதப் புகார்களுக்கு 100 நிமிட காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது, தடைக்காலத்தில் பிரச்சாரம் செய்வது, அனுமதியின்றி பதாகைகள் அல்லது சுவரொட்டிகளை வைப்பது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவது, சொத்துக்களை சேதப்படுத்துவது, மிரட்டுவது போன்ற தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
சிவிஜில் என்பது மக்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை, தேர்தல் அதிகாரி மற்றும் பறக்கும் படைகளுடன் இணைக்கும் ஒரு எளிதானது செயலியாகும். இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் அரசியல் முறைகேடு சம்பவங்கள் குறித்து சில நிமிடங்களில் தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக புகாரளிக்க முடியும். சிவிஜில் பயன்பாட்டில் புகார் அனுப்பப்பட்டவுடன், புகார்தாரர் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறுவார். இதன் மூலம் புகார் அளிக்கும் நபர் தங்கள் மொபைலிலேயே புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் நிலையைக் கண்காணிக்க முடியும்.
எம்.பிரபாகரன்