ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரையீசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்!-அவர் இறுதியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் படங்கள்.

இப்ராஹீம் ரையீசி (Ebrahim Raisi)

ஈரான் நாட்டின் அதிபரும், ஈரான் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், பழமைவாதியுமான இப்ராஹிம் ரையீசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவல் உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஈரான் நாட்டின் 8-வது குடியரசுத் தலைவராக 19 சூன் 2021 அன்று இப்ராஹீம் ரையீசி (Ebrahim Raisi) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசியல்வாதியும், ஈரானின் வல்லுநர்கள் மன்ற உறுப்பினரும், இசுலாமிய அறிஞரும் மற்றும் ஈரான் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆவார். மேலும், இவர் ஈரான் நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் போன்ற நீதித்துறையில் பல பதவிகளில் பணிபுரிந்தவர். இவர் பழமை வாய்ந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் அஸ்தான் கட்ஸ் ரசாவி அமைப்பின் தலைவராக 2016 முதல் 2019 முடிய பணியாற்றினார். இவர் தெற்கு கொராசான் மாகாணம் சார்பாக 2006-இல் ஈரானிய அறிஞர் சபைக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

2021 ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரையீசி 61.95% வாக்குகளைப் பெற்று ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இரானில் சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.8 கோடி பேர் வாக்களித்தனர். இதில் இப்ராகிம் ரையீசி சுமார் 1.8 (61.95%) கோடி வாக்குகள் பெற்றுள்ளார். மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜர்பைஜான் குடியரசு மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் எல்லையில் உள்ள ‘அராஸ்’ ஆற்றின் மீது கட்டப்பட்ட நீர்மின்சார வளாகங்கள், மின்சார உற்பத்தி ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வெளியுறவுத்துறை சகாக்களுடன் அரசு முறை பயணமாக சென்ற ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரையீசி அந்த நிகழ்ச்சியில் இறுதியாக கலந்து கொண்டு திரும்பும் போது தான் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான இடத்தில் விபத்துக்குள்ளானது.

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரையீசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் பயணித்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை (19.05.2024) விபத்துக்குள்ளான நிலையில் ஹெலிகாப்டரின் எரிந்த இடிபாடுகள் பனிப்புயல் சூழ்நிலையில் இரவு முழுவதும் தேடுதலுக்குப் பிறகு இன்று (19.05.2024) திங்கள்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரையீசி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஹெலிகாப்டரில் அவருடன் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஹெலிகாப்டர் ஒரு மலை உச்சியில் மோதியதை தளத்தில் இருந்து படங்கள் காட்டுகின்றன, இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரையீசி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் ‘அராஸ்’ஆற்றின் மீது கட்டப்பட்ட நீர்மின்சார வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் குடியரசுத் தலைவர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரையீசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஜர்பைஜான் குடியரசு (Republic of Azerbaijan)  ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காசுப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென்காக்கசு மலைப் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply