தென் சீனக் கடலில் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குப் பயணம் செய்தன. இந்தப் பயணம் பிலிப்பைன்ஸுடனான இந்தியாவின் வலுவான உறவுகளையும், பங்களிப்பை மேலும் ஆழப்படுத்துவதில் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.
இந்தியக் கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் இடையேயான நிபுணர் பரிமாற்றம், விளையாட்டுப் போட்டிகள், கப்பல் தளப் பயணங்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு சமூகத் தொடர்புத் திட்டங்கள் ஆகியவை துறைமுக நிகழ்வுகளில் இடம்பெற்றிருந்தன.
பிலிப்பைன்ஸ் கடற்படை தளபதி அட்மிரல் ரெனாடோ டேவிட் மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் நடவடிக்கைகளுக்கான துணை கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் ரோலாண்டோ லிசோர் புன்சலன் ஜூனியர் ஆகியோருடன் கிழக்குக் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ராஜேஷ் தன்கர் கலந்துரையாடினார். ஒத்துழைப்புக்கான வழிகள், பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள் மற்றும் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை ஆகியவை குறித்து கிழக்குக் கடற்படை அதிகாரி பிலிப்பைன்சின் வைஸ் அட்மிரல் டோரிபியோ துலிநயன் அடாசியுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார். இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படைகளுக்கு இடையே கடற்படை ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே வலுவான ராஜீய மற்றும் பாதுகாப்பு உறவுகளுக்கு இந்தப் பயணம் ஒரு சான்றாகும். தனது கிழக்கு நோக்கிய செயல்பாடு மற்றும் கடல் கொள்கைகளுக்கு ஏற்ப இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
எம்.பிரபாகரன்