மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் இணையமைச்சர் ரவ்னீத் சிங், உலக உணவு இந்தியா 2024 மாநாட்டுக்கான இணையதளம் மற்றும் மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தனர்.

உலக உணவு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி  3-வது ஆண்டின் முன்னோட்டமாக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் மற்றும் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் ஆகியோர் உலக உணவு இந்தியா 2024-க்கான இணையதளம் மற்றும் மொபைல் செயலியை  இன்று (19.06.2024) தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தனது தலைமை உரையில், வேளாண் உற்பத்தி வீணாவதைக் குறைத்தல், மதிப்புக் கூட்டுதலை ஊக்குவித்தல், உணவுப் பாதுகாப்பு உறுதி செய்தல் மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் உணவு பதப்படுத்தும் துறையின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மத்திய அரசு தனது சிறந்த அணுகுமுறையின் மூலம் உணவு மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார். இத்துறையில் தன்னிறைவை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் மற்றும் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம்  ஆகியவை இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் முன்னோடித் திட்டங்கள் என்று திரு சிராக் பாஸ்வான் கூறினார்.

இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாட்டின் மிகப்பெரிய உணவு நிகழ்வான உலக உணவு இந்தியா என்ற மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியை தமது அமைச்சகம் ஏற்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பேசுகையில், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வேளாண் உற்பத்திப் பொருட்கள் வீணாவதைத் தடுப்பதுடன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகக் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply