கோவாவில் 2024 நவம்பர் 20 முதல் 24-ம் தேதி வரை உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (World Audio Visual and Entertainment Summit-WAVES – வேவ்ஸ்) இந்தியா நடத்தவுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ், ஊடகம், பொழுதுபோக்கு (M&E) உலகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இதில் மகத்தான தொழில்நுட்பங்கள் வந்துள்ளதாகவும் கூறினார். இது ஒருபுறம், பல வாய்ப்புகளைத் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஊடகம், பொழுதுபோக்குத் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், திறமைசாலிகளை அதிகரிப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இந்த முயற்சிகள், உயர்தர உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் எனவும் நாட்டில் அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்கிப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். வரும் மாதங்களில் அரசும் தொழில்துறையும் அந்த இலக்கை நோக்கி தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேவ்ஸ் எனப்படும் இந்த உச்சிமாநாடும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவான ஐஎஃப்எஃப்ஐ-யும் ஒரே அம்சத்தின் வெவ்வேறு பகுதிகளாக இருக்கும் என்று அவர் கூறினார். வேவ்ஸ் உச்சிமாநாடு முயற்சியின் உள்ளீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) முடிவின் வெளியீடு போன்றது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். உள்ளீடு, வெளியீட்டின் ஒருங்கிணைப்பு கோவாவை படைப்பாற்றல் திறனுக்கான ஒரு முக்கிய மையமாக நிறுவும் என்று அவர் குறிப்பிட்டார். புதுமையான கலை வெளிப்பாட்டிற்கான கலங்கரை விளக்கமாக கோவாவின் நிலையை இந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார். சர்வதேச திரைப்பட நிதியத்துடன் இணைந்து வேவ்ஸ் 2024 நிகழ்வை நடத்துவதற்காக கோவா முதலமைச்சருக்குத் திரு அஸ்வினி வைஷ்ணவ் தமது நன்றியைத் தெரிவித்தார்.
கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் பேசுகையில், சர்வதேச திரைப்பட விழா நீண்ட காலமாக திரைப்படச் சிறப்பை விளக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது என்றார். இந்த நிலையில், வேவ்ஸ் நிகழ்வு வளர்ந்து வரும் ஊடக, பொழுபோக்குத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறினார். இரண்டு நிகழ்வுகளும் இணைந்து இணையற்ற வாய்ப்புகளைக் கொண்ட எதிர்காலத்திற்குள் அழைத்துச் செல்லும் என்று அவர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்