ஃபிஜி பயணத்தின் போது அந்நாட்டு அதிபரை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சந்தித்தார்.

இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று காலை (ஆகஸ்ட் 6, 2024) நாடியில் இருந்து ஃபிஜியில் உள்ள சுவா நகருக்கு சென்றார். ஃபிஜி, நியூசிலாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கான தமது அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக அவர் அங்கு சென்றுள்ளார். ஃபிஜி பிரதமர் சிட்டிவேனி ரபுகா விமான நிலையத்தில் அவரை சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். இந்தியத் தலைவர் ஒருவர் ஃபிஜி பகுதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மக்களவை உறுப்பினர்கள் திரு சௌமித்ரா கான் மற்றும் திரு ஜுகல் கிஷோர் ஆகியோர் சென்றுள்ளனர்.

ஃபிஜி பிரதமர் முன்னிலையில் அதிபர் திரௌபதிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு மாளிகைக்கு பயணம் செய்த குடியரசுத்தலைவரை ஃபிஜி அதிபர் ரட்டு வில்லியம் மைவல்லி கடோனிவேர் அன்புடன் வரவேற்றார். இந்தியா-ஃபிஜி உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஃபிஜி முக்கிய பங்குதாரராக உள்ள பசிபிக் தீவு நாடுகளுடன் நமது உறவுகள் மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

ஃபிஜியின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான – கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி – விருதினை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு அரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஃபிஜி அதிபர் வழங்கினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்முயற்சியான ‘அரசுத் தலைவர்களின்  குடியிருப்புகளை சூரிய மின்சக்திமயமாக்கும்’ திட்டத்தின் முன்னேற்றத்தை குடியரசுத்தலைவர் முர்மு பார்வையிட்டார்.

அடுத்த நிகழ்வாக, குடியரசுத்தலைவர் ஃபிஜி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அளவில் பெரிய வேறுபாடு இருந்தாலும், இந்தியாவுக்கும், ஃபிஜிக்கும் துடிப்பான ஜனநாயகம் உட்பட பல பொதுவான அம்சங்கள் உள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

தனது நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையிலும், அடித்தள நிலையில் ஜனநாயகத்தை வளர்ப்பதில் சிறப்பான அனுபவம் கொண்டது என்ற முறையிலும், ஃபிஜியுடன் எப்போதும் கூட்டாளியாக செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்று தமது உரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் உறுதியளித்தார்.

பருவநிலை மாற்றம், மனித மோதல்களுக்கு தீர்வு காணுதல் என்ற இரண்டு முக்கிய உலகளாவிய சவால்களில் கவனம் செலுத்தி, பொதுவான முயற்சிகளுக்கு ஃபிஜி அளித்து வரும் பங்களிப்புக்காக இன்று உலகம் முழுவதும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த உலகளாவிய உரையாடலை வடிவமைப்பதாக இருந்தாலும், கடல் சார்ந்த நாடுகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதாக இருந்தாலும், ஃபிஜி உலக நன்மைக்கு மகத்தான பங்களிப்பை செய்து வருகிறது. உலகெங்கிலும் ஃபிஜி ஆற்றி வரும் பணியின் முக்கியத்துவத்தை இந்தியா பெரிதும் மதிக்கிறது, பாராட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர், ஃபிஜி பிரதமர் சிட்டிவேனி ரபுகா, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேம்படுத்தவும், கூட்டாண்மையை வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். ஃபிஜி நாட்டுடன் வளர்ச்சிக்கான கூட்டணியை வலுப்படுத்தவும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனை உருவாக்கவும், தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டில் கவனம் செலுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

சுவாவில் இந்திய ஹை கமிஷன் அலுவலகம், இந்திய கலாச்சார மைய வளாகம், 100 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றிற்கு திட்ட இடங்களை ஒதுக்குவதற்கான ஆவணங்களை ஒப்படைக்கும் விழாவிற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு, ஃபிஜி பிரதமர் திரு சிட்டிவேனி ரபுகா ஆகியோர் தலைமை தாங்கினர்.

வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினர் திரண்டிருந்த கூட்டத்திலும் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். 145 ஆண்டுகளுக்கு முன் ஃபிஜிக்கு வந்த ‘கிர்மிட்டியா’ ஒப்பந்தத் தொழிலாளர்களின் மன உறுதியும், அனைத்துத் தடைகளையும் தாண்டி புதிய நாட்டில் அவர்கள் செழித்தோங்கியதும் உலகிற்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

நாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் உலகெங்கிலும் உள்ள வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினரை முக்கிய கூட்டாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் நாங்கள் காண்கிறோம் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவை கௌரவிக்கும் வகையில் சுவாவில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தையும் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார். மகாத்மா காந்தி நினைவு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர், அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதிகாரபூர்வமான நிகழ்ச்சியில், ஃபிஜி அதிபர் திரு ரட்டு வில்லியமே மைவாலிலி கடோனிவேர், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை கௌரவிக்கும் வகையில் அரசு மாளிகையில் வரவேற்பு அளித்தார். இதில் அனைத்து தரப்பு ஃபிஜி மக்களும் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக ஃபிஜி அதிபர் கத்தோனிவேரே, பிரதமர் ரபுகா, ஃபிஜி அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சுவாவில் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், குடியரசுத்தலைவர் நாடிக்கு புறப்பட்டுச் சென்றார், அங்கிருந்து அவர் நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு நாளை விமானம் மூலம் புறப்படுவார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply