அறிமுகம்:
இந்திய பாரா தடகளத்தின் வரலாற்று தருணமாக, தரம்பீர் 2024 பாராலிம்பிக்கில் ஆண்கள் கிளப் த்ரோ எஃப்51 இறுதிப் போட்டியில் 34.92 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்தார். மூட்டு குறைபாடு, கால் நீள வேறுபாடு, பலவீனமான தசை சக்தி, பலவீனமான இயக்கம் கொண்ட விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய எஃப் 51 பிரிவில் தரம்பீர் போட்டியிட்டார். பாராலிம்பிக் விளையாட்டுகளில் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
பின்னடைவிலிருந்து வெற்றியை நோக்கி:
1989 ஜனவரி 18 அன்று ஹரியானாவின் சோனிபட்டில் பிறந்த தரம்பீர், வாழ்க்கையை மாற்றிய விபத்தில் சிக்கினார். அது அவரது பாதையை மாற்றியது. தனது கிராமத்தில் உள்ள ஒரு கால்வாயில் டைவ் அடிக்கும்போது, தண்ணீரின் ஆழத்தை தவறாக கணித்து, கீழே உள்ள பாறைகளில் மோதினார். இது இடுப்புக்கு கீழே பக்கவாதத்திற்கு வழிவகுத்தது. வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் புதிய வாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. 2014-ம் ஆண்டில், தரம்பீர் பாரா-விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கினார். இது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது. இதேபோன்ற நிலையை எதிர்கொண்ட சக பாரா தடகள வீரரான அமித் குமார் சரோஹாவின் வழிகாட்டுதலின் கீழ் கிளப் த்ரோவில் பயிற்சியைத் தொடங்கினார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம், தரம்பீர் விளையாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தார். பயிற்சியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் 2016 ரியோ பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
அப்போதிருந்து, தரம்பீர் நிலையான திறனை வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.
திவாஹர்