மீன்வள ஏற்றுமதி மேம்பாடு குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று விசாகப்பட்டினத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மீன்வள ஏற்றுமதி மேம்பாடு குறித்த பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியனும் பங்கேற்றார்.  

9 சதவீத வலுவான வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் முக்கிய பங்கினை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சி 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்ததாக மாற்றுவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் கூறினார். இத்துறையின் பரந்த திறனைப் பயன்படுத்தி, நாட்டை சர்வதேச பதப்படுத்தும் மையமாக மாற்ற இந்திய அரசு லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த துறைமுகங்களை மேம்படுத்துவதன் மூலம் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க மீன்வளத் துறையை டிஜிட்டல் மயமாக்குவது முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இறால் பிரிவை மேலும் மேம்படுத்துவதற்காக கரு இனப்பெருக்க மையங்களை நிறுவுவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு தீவுகளில் மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், நோய் தாக்காத சினை மீன்கள் மற்றும் விதைகளை பராமரிப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, விரிவான பரிந்துரைகளை வழங்க ஒரு குழு அமைக்கப்படும் என்றார்.

2024, ஆகஸ்ட் 30 அன்று மகாராஷ்டிராவின் பால்கரில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.1564 கோடி மதிப்பிலான 218 புதிய திட்டங்கள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பதாக மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தொழில்முனைவோர், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply