தேசியவாதத்தில் சமரசம் செய்து கொள்வது தேசத்திற்குச் செய்யும் துரோகம் என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் சைனிக் பள்ளியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுயநலம், அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு தேசத்துக்கான கடமையை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.
நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக கல்வி உள்ளதைக் குறிப்பிட்ட திரு ஜக்தீப் தன்கர், ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் கல்வியின் சக்தியை எடுத்துரைத்தார்.
இன்று உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவமான அடையாளம் குறித்துப் பேசிய இன்றைய இந்தியா பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றார். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தற்காலிகமானது என்று கூறிய 370 வது பிரிவு, சிலரால் நிரந்தரமாக கருதப்பட்டது என்று அவர் கூறினார். இந்த பத்து ஆண்டுகளுக்குள், அது ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் இதுதான் இன்றைய இந்தியா என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோரக்பூரில் புதிய சைனிக் பள்ளி நிறுவப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு இந்தப் பள்ளி வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆளுகை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் உத்தரப்பிரதேச மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், ” நாட்டில் வீசும் வளர்ச்சி அலையில் உத்தரப்பிரதேசத்தின் பங்கேற்பு தேச நிர்மாணத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், உத்தரப்பிரதேச மாநில இடைநிலைக் கல்வித் துறை இணையமைச்சர் திருமதி குலாப் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா