லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங் நினைவிடத்தில் காவல்துறை தியாகிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா மற்றும் 28 பேர் கொண்ட குழுவினர் அஞ்சலி செலுத்தினர். மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எல்.ஏ.சி.யில் பருந்து போன்ற கண்காணிப்பைக் கொண்டிருக்கும் இந்திய திபெத் எல்லைக் காவல்துறை, இந்திய திபெத் எல்லைக் காவல்படை மற்றும் இந்திய ராணுவத்தின் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் வீரர்களின் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த வருகை இருந்தது.
பல்வேறு மாநில காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவிற்கு திரு யாதவா தலைமைவகித்தார். தெலுங்கானா காவல்துறை டிஐஜி என்.பிரகாஷ் ரெட்டி இந்தக் குழுவின் துணைத்தலைவராக இருந்தார். தில்லிக் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி திரு ராஜா பாந்தியா, காவல்துறை தூதுக்குழு உறுப்பினராக தில்லி காவல்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1959, அக்டோபர் 21 அன்று தேசத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த பத்து சிஆர்பிஎஃப் அதிகாரிகள் / பணியாளர்களின் தியாகத்தின் நினைவாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படும் இந்த நினைவுச்சின்னம் இந்திய காவல் படைகளுக்கு ஒரு புனித இடமாக இருந்து வருகிறது. நினைவுகூர்வதன் அடையாளமாக 1960 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் மிகவும் மரியாதைக்குரிய பாரம்பரியமாகத் தொடர்கிறது. இந்த இடம் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 15,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
திவாஹர்