மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்ஸே ஆகியோர் இந்தியா திரும்பிய இந்திய பாரா துப்பாக்கிச் சுடுதல் குழுவினரை புதுதில்லியில் இன்று பாராட்டினர். அவனி லெகாரா (தங்கம்), மணீஷ் நர்வால் (வெள்ளி), ரூபினா பிரான்சிஸ் (வெண்கலம்), மோனா அகர்வால் (வெண்கலம்) ஆகியோர் மொத்தம் 4 பதக்கங்களை வென்றனர்.
விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். விளையாடும்போது, உங்களுக்காக மட்டும் அடையாமல், உங்கள் பயிற்சியாளர்கள், உங்கள் பெற்றோர், முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறீர்கள் என்று வீரர்களிடம் கூறினார். பாரிஸ் புறப்படுவதற்கு முன்பு 84 பாரா விளையாட்டு வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார். சிலர் பதக்கங்களுடன் திரும்பினர் எனவும் மற்றவர்கள் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றனர் எனவும் அமைச்சர் கூறினார். எப்போதும் தங்கத்தை இலக்காகக் கொண்டு உறுதியுடன் தொடர்ந்து முன்னேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
சதந்திரத்தின் 100வது ஆண்டான 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய விளையாட்டுத் துறை முன்னேற்றமும் அவசியம் என அவர் கூறினார். வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அனைத்து வீரர்களுக்கும் சர்வதேச தரத்திலான பயிற்சியை அரசு உறுதி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
இன்று அமைச்சரை சந்தித்த குழுவில் பாரா வில்வித்தை வீரர் ராகேஷ் குமார், பாரா தடகள வீரர் பிரணவ் சூர்மா ஆகியோரும் இருந்தனர். கலப்பு அணி காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் ராகேஷ், ஷீத்தல் தேவியுடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்கள் கிளப் த்ரோ எஃப் 51 போட்டியில் பிரணவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 27 பதக்கங்களை (6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம்) வென்றுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா