7-வது தேசிய ஊட்டச்சத்து மாதம்: 6-வது நாள் வரை 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.37 கோடி செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன.

குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 31 ஆகஸ்ட் 2024 அன்று தொடங்கப்பட்ட 7-வது தேசிய ஊட்டச் சத்து மாத (ராஷ்ட்ரிய போஷன் மாஹ்) நிகழ்ச்சிகள், ரத்த சோகை, வளர்ச்சி கண்காணிப்பு, சத்தான உணவு போன்ற முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துகிறது.

நாடு தழுவிய கொண்டாட்டங்களின் 6 வது நாள் நிலவரப்படி, 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 752 மாவட்டங்களில் இருந்து 1.37 கோடி செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன. பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகியவை இதுவரை பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளன.

கருப்பொருள்களைப் பொறுத்தவரை, ரத்த சோகை குறித்து 39 லட்சத்துக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள், வளர்ச்சி கண்காணிப்பில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள், சத்தான உணவளிப்பதில் கிட்டத்தட்ட 20 லட்சம் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.

2018-ம் ஆண்டில் நாட்டில் ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட முதல் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இதில் அமைச்சகங்கள், துறைகளுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்து வருகிறது.

 தற்போதைய ஆண்டில் ஊட்டச்சத்து மாதத்திற்கு அதிக பங்களிப்பு செய்யும் அமைச்சகங்கள் வரிசையில் 1.38 லட்சம் செயல்பாடுகளுடன் கல்வி அமைச்சகமும், 1.17 லட்சம் செயல்பாடுகளுடன் சுகாதார அமைச்சகமும் உள்ளன. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் 1.07 லட்சம் செயல்பாடுகளையும், ஆயுஷ் அமைச்சகம் 69 ஆயிரம் செயல்பாடுகளையும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 64 லட்சம் செயல்பாடுகளையும் நடத்தியுள்ளன.

ஒவ்வொரு கருப்பொருளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.  ரத்த சோகை முகாம், வளரிளம் பெண்களுக்கான (14-18 வயது) ரத்த சோகை முகாம், வளர்ச்சி கண்காணிப்பு மேம்பாடு குறித்த திறன் அமர்வு, வளர்ச்சி அளவீடு சரிபார்ப்பு, பேறுசார் வயதில் உள்ள பெண்களுக்கான ரத்த சோகை முகாம், வளர்ச்சி அளவீட்டு முறை, நகர்ப்புற குடிசைப்பகுதி சார்ந்த ரத்த சோகை முகாம், தொலைதூர நடவடிக்கைகள், உள்ளூர் உணவுப் பொருட்கள் மூலம் இணை உணவு சமைப்பது குறித்த செயல்விளக்க அமர்வு,  நாட்டு நலப்பணித் திட்டம்/ நேரு யுவ கேந்திரா போன்றவை சார்ந்த ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், இணை உணவில் உணவு பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வு முகாம்,  விளையாட்டு அடிப்படையிலான கற்றல் குறித்து செயல்விளக்க அமர்வு போன்ற பல நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply