தமிழக எதிர்க்கட்சிகள் கோவையில் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டம் சம்பந்தமாக உண்மைக்குப் புறம்பான செய்தியைப் பரப்ப முயற்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கடந்த 11 ஆம் தேதியன்று கோவையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாரமன் அவர்கள் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்புனருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டமானது தொழில் அமைப்பினருக்கு வருங்காலங்களிலே அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அடுத்தடுத்து டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி கூட்டங்களில் பேசி சுமூகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தான்.
அதற்கு ஏற்றவாறு இக்கூட்டத்தில் அனைவருடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டு தீர்வு ஏற்படுத்தக்கூடிய நிலையை மேற்கொள்வோம் என்று மத்திய நிதியமைச்சர்அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறார்.
இப்படி இருக்கும் போது மத்திய நிதியமைச்சரை நேரடியாக சந்தித்த தமிழ்நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு. சீனிவாசன் அவர்களின் நோக்கம் குறித்த உண்மை நிலையை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை அவர்களும் இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.
உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க வின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.
எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.
தமிழக எதிர்க்கட்சிகள் மாநில வளர்ச்சி, மக்கள் நலன், நாட்டு நலன், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்காக நடைபெறும் மத்திய அரசு சார்ந்த கூட்டங்களை நேர்கொண்ட பார்வையோடு அணுக வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா