மத்திய அரசு உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள பொது மக்களைப் பத்திரமாக மீட்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெய்த கனமழையினால் சாமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பொது மக்கள் சிக்கியுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களில் 4 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே மத்திய அரசு நிலச்சரிவில் சிக்கியுள்ள அனைவரையும் பத்திரமாக மீட்க துரிதமான நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 40 பேர் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கு பெய்த கனமழையால் தவாகாட் தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் ஆதி கைலாஷ் கோயிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப் பகுதியில் சிக்கி, கீழே வரமுடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தின் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 யாத்திரீகர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்குச் சென்ற போது நிலச்சரிவினால் சிக்கியுள்ளதால் அவர்களை பத்திரமாக மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உணவு, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா