தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது.
பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைகள், பெண் சுதந்திரம் போன்றவற்றை சிலர் பேசியிருந்தாலும், பெரியார் தனது பேச்சுக்கள் மூலம் இவற்றுக்கு எதிராக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இந்து மாதத்தில் உள்ள சாதிய படிநிலைகளை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், சாதிய படிநிலைகளில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சுரண்ட பார்ப்பனியர்கள் சனாதன தர்மத்தை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து விமர்சித்தார்.
சாதிய ஒடுக்குமுறைகள் மட்டுமல்லாது சமூகத்தில் பின்தங்கியுள்ள சாதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கே.பி.சுகுமார்