குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 செப்டம்பர் 20 முதல் 22 வரை யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்கிறார். யூனியன் பிரதேசத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
தமது சுற்றுப்பயணத்தின்போது, குடியரசுத் துணைத் தலைவர் பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 20 அன்று டாமனில் திரு. தன்கர் ஜம்பூரில் பறவை வளர்ப்புக் கூடத்தை தொடங்கி வைக்கிறார். ஜம்ப்ரினில் உள்ள சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் ரிங்கன்வாடா பஞ்சாயத்து மற்றும் ரிங்கன்வாடா பள்ளி ஆகியவற்றையும் அவர் பார்வையிடுவார்.
செப்டம்பர் 21 அன்று தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு திரு தன்கர் செல்கிறார். அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். டோக்மார்டி ஆடிட்டோரியத்தில் மேற்கு மண்டல கலாச்சார மையம் ஏற்பாடு செய்துள்ள பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இரண்டாவது நாள் பிற்பகலில், டையூவில் உள்ள உள்ளாட்சி பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மன்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், குக்ரி கப்பல் மற்றும் டையூ கோட்டை உள்ளிட்ட முக்கிய முக்கிய இடங்களையும் திரு தன்கர் பார்வையிடுவார்.
செப்டம்பர் 22 அன்று, குடியரசுத் துணைத் தலைவர் டையூவில் உள்ள கோக்லா நீலக் கொடி கடற்கரை மற்றும் கோக்லா கூடார நகரத்திற்கு செல்கிறார். கோக்லாவில் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்) அடுக்குமாடி குடியிருப்புகளையும், டையூவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். திரு. தன்கர் தமது சுற்றுப்பயணத்தின் இறுதி நாளன்று டையூவில் உள்ள கெவ்டியில் உள்ள கல்வி மையத்தையும் பார்வையிடுகிறார்.
திவாஹர்