இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) நடமாடும் உணவு பாதுகாப்பு முன்முயற்சி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு சோதனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம் வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன் நோக்கத்திற்கு ஏற்ப, செப்டம்பர் 27மற்றும் 28ஆகிய தேதிகளில், கார்டுங் லா வழியாக 17,582 அடி உயரத்தில் உள்ள நுப்ரா பள்ளத்தாக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி, இவ்வளவு உயரத்தில் முதல் விரிவான உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைக் குறிக்கிறது, மேலும் அதிக உயரத்திலும் தொலைதூரப் பகுதிகளிலும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நடமாடும் உணவுப் பாதுகாப்பு பரிசோதனைக் கூடத்தின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.
பால், மசாலாப் பொருட்கள் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை அந்தந்த இடத்திலேயே சோதனை செய்வதன் மூலம், உணவுப் பாதுகாப்பு தரங்களை கடைபிடிப்பதை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த இரண்டு நாள் நடவடிக்கையின் போது, மொத்தம் 35 உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இதில் 12 பால் மாதிரிகள், 8 மசாலா மாதிரிகள் மற்றும் 9 பழச்சாறுகளின் மாதிரிகள் அடங்கும். மேலும், விரிவான நுண்ணுயிர் பகுப்பாய்வுக்காக, ஆறு உள்ளூர் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
உள்ளூர் உணவு வணிக ஆபரேட்டர்களுக்கு, உணவு பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்குவதன் முக்கியத்துவம், தேவையான பதிவுகள் மற்றும் உரிமங்களைப் பெறுதல் மற்றும் மீறல்களின் சாத்தியமான விளைவுகளைப் புரிந்துகொள்வது குறித்து கல்வி கற்பதே இந்த இயக்கத்தின் குறிப்பிடத்தக்க கவனமாக இருந்தது. விழிப்புணர்வை மேம்படுத்த, சுகாதார தரநிலைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் எஃப்பிஓ-க்களிடையே சிறந்த உணவு பாதுகாப்பு நடைமுறைகளை ஊக்குவிக்க தகவல் காட்சி பலகைகள் விநியோகிக்கப்பட்டன.
இநதிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் உணவுப் பாதுகாப்பு (எஃப்.எஸ்.டபிள்யூ) முன்முயற்சியானது, பால், நீர், சமையல் எண்ணெய் மற்றும் பிற அன்றாட உணவுப் பொருட்களில் பொதுவான கலப்படங்களுக்கான எளிய சோதனைகளை நடத்துவது மட்டுமல்லாமல், குடிமக்களிடையே உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கிய கருவிகளாகவும் செயல்படுகின்றன. சோதனைக்கு கூடுதலாக, நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனங்கள் உணவு கையாளுபவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டங்களை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சிறு உணவு வணிகங்களில் கவனம் செலுத்துகின்றன. மேலும், இந்த நடமாடும் அலகுகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள களப்பணியாளர்கள், தொலைதூரப் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கின்றன.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செரிங் சோரோல், பத்மா அங்மோ, பத்மா யாங்சேஸ் மற்றும் உணவு ஆய்வாளர் ஹுமைரா யாசீன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட லே-வின் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பின் உணவுப் பாதுகாப்புத் துறையால் நுப்ரா பள்ளத்தாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பிரச்சாரம், மிகவும் தொலைதூர மற்றும் சவாலான பிராந்தியங்களில் கூட பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திவாஹர்