அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் இயக்கம் – மக்கள் திட்ட இயக்கத்தில் (2024-25) தீவிரமாகப் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்டோபர் 1 , 2024 தேதியிட்ட கடிதத்தில், 2025-26 ஆம் ஆண்டிற்கான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதில் உற்சாகமான மற்றும் உறுதியான பங்கேற்பின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
“உலகம் தன்னளவில் முழுமையடைவதைப் போலவே, நமது கிராமங்களும் திறன்மிக்கதாகவும், அதிகாரமளிப்பதாகவும், வளமானதாகவும் இருக்க வேண்டும்” என்ற பண்டைய வேத வசனத்திலிருந்து உத்வேகம் பெற்ற பிரதமர், தன்னிறைவு மற்றும் நீடித்த கிராமங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தியுள்ளார். கிராமிய பாரதத்தின் முழுமையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு, கிராம வளர்ச்சிக்கு மையமான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு தங்களது பங்களிப்பின் மூலம் இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் ஒவ்வொருவரும், ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்கை அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஒவ்வொருவரும் தங்கள் பஞ்சாயத்துகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வளமான மையங்களாக மாற்ற உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமரின் செய்தி, பரவலான பங்களிப்புக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த முயற்சியின் வெற்றி, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சியைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வலுவான, தற்சார்புடைய, வளர்ச்சியடைந்த மற்றும் வளமான இந்தியாவுக்கான அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் இயக்கம்- மக்கள் திட்டப் பிரச்சாரத்தில் பங்கேற்க ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெங்கும் இந்தச் செய்தி சென்றடைவதை உறுதி செய்யுமாறு அனைத்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், வளர்ந்த மற்றும் சுயசார்பு இந்தியா என்ற பார்வையுடன் இந்தப் பிரச்சாரம் சீரமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முழுமையான வளர்ச்சியின் இலக்கை அடைவதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வளர்ச்சி செயல்பாட்டில் ஒவ்வொரு குரலும் யோசனையும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மக்கள் திட்ட இயக்கத்தை ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்று விவரித்தார். தங்கள் கிராமத்தின் வளர்ச்சியைத் திட்டமிட குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உண்மையான தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை வகுப்பதில் கிராம சபைகளில் தீவிரமாக பங்கேற்பதை ஊக்குவித்தார். நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் இந்த இயக்கத்தின் தொடர்பை இணையமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், விரிவான தகவல்களை பரப்புவதற்காக கிராம சபைகளில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்