மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து மை பாரத் ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய கடலோர மற்றும் கடற்கரை தூய்மை இயக்கத்தை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர்ன் நலன் , வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னின்று நடத்தினார். பெரிய அளவிலான இந்த நிகழ்வு, 2024, செப்டம்பர் 17 முதல் “தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம் ” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற “தூய்மையே சேவை ” இயக்கத்தின் உச்சக்கட்டத்தைக் குறித்தது.
மகாத்மா காந்தியின் பிறப்பிடமான போர்பந்தரிலிருந்து இந்த இயக்கத்தை டாக்டர் மாண்டவியா தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் 1,00,000 க்கும் மேற்பட்ட மை பாரத் இளைஞர் தன்னார்வலர்கள் ஒரே நேரத்தில் இந்தியாவின் கடலோரப் பகுதியில் 1,000 இடங்களில் தூய்மைப்படுத்தும் முயற்சிகளில் பங்கேற்றனர். தன்னார்வலர்கள் கடற்கரைகளில் இருந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப்பொருட்களை அகற்றுவதில் கவனம் செலுத்தினர், இது தூய்மையான கடலோர சூழலுக்கு பங்களித்தது.
போர்பந்தரில் தன்னார்வலர்களிடையே உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, பத்தாண்டுகளுக்கு முன் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கியதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தை எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் 10-வது ஆண்டை நாம் கொண்டாடும் இந்த வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான இந்தியா பார்வைக்கு இந்த நாடு தழுவிய முயற்சி பொருத்தமானதாகும். நமது இளைஞர்கள், இன்று தங்களது குறிப்பிடத்தக்க பங்கேற்பின் மூலம், மகாத்மா காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நீடித்த தன்மைக்கு உறுதிபூண்டுள்ளனர். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்றுவது இந்த பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே, இன்று காட்டப்படும் அர்ப்பணிப்பு இந்தியாவை தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும், “என்று அவர் கூறினார்.
கடலோர தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின், போர்பந்தரில் உள்ள கீர்த்தி மந்திரில் மகாத்மா காந்திக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் சுதந்திர இயக்கம் மற்றும் அகிம்சை தத்துவத்திற்கு மகாத்மா காந்தி செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் அவர் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, டாக்டர் மாண்டவியா போர்பந்தர் காதி பந்தரிலிருந்து கதர் ஆடைகளை வாங்கி காந்தியின் தற்சார்பு பார்வையை கௌரவித்தார். சுதேசி இயக்கத்தின் அடையாளமாகவும், தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் மைல்கல்லாகவும் மகாத்மா காந்தி உயர்த்திய காதியின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
எம்.பிரபாகரன்