சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருத்துவ சாதனங்களுக்கான விரிவான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடன், நாட்டின் ஒழுங்குமுறை கட்டமைப்பை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவ சாதனத் துறையில் வளர்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிக்கும் ஒரு ஒழுங்குமுறை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்க முயல்கிறது.
அதன் மருத்துவ சாதன ஒழுங்குமுறை அமைப்பில் உலகளாவிய சீரமைப்பை அடைவதற்கும், உள்நாட்டு தொழில்துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், நாடுகடந்த முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), 2024-ல் சர்வதேச மருத்துவ சாதன கட்டுப்பாட்டாளர்கள் மன்றத்தில் (IMDRF) இணை உறுப்பினராக விண்ணப்பித்தது. இணை உறுப்பினருக்கான இந்தியாவின் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்த பிறகு, செப்டம்பர் 2024-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் நடைபெற்ற ஐஎம்டிஆர்எப்-ன் 26வதுஅமர்வின் போது CDSCO -ன் மூத்த அதிகாரிகளுடன் ஐஎம்டிஆர்எப் மேலாண்மைக் குழு (MC) நடத்திய சந்திப்பு, விவாதங்களுக்குப் பிறகு, CDSCO மன்றத்தின் இணை உறுப்பினராக ஐஎம்டிஆர்எப்-ன் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
சர்வதேச மருத்துவ சாதன கட்டுப்பாட்டாளர்கள் மன்றம் (IMDRF), 2011 -ல் நிறுவப்பட்டது, இது சர்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறைகளின் ஒத்திசைவு மற்றும் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய மருத்துவ சாதன கட்டுப்பாட்டாளர்களின் கூட்டுக் குழுவாகும். ஐ.எம்.டி.ஆர்.எஃப் உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகிய நாடுகளின் தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்குவர். ஐ.எம்.டி.ஆர்.எஃப்-ல் இணை உறுப்பினர் அந்தஸ்து பெறுவது, நம்பகத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதுடன், உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்களுடன் ஒத்துழைப்பையும் வழங்கும்.
இந்த உறுப்பினர் அந்தஸ்து, உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை தேவைகளை ஒத்திசைக்க உதவுகிறது, இது உற்பத்தியாளர்களுக்கான சிக்கலைக் குறைப்பதுடன், ஒத்துழைப்பை ஊக்குவித்தல், ஒழுங்குமுறைகளை ஒத்திசைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உதவுகிறது. புதிய மருத்துவ சாதனங்களுக்கான புதுமை மற்றும் சரியான நேரத்தில் அணுகலை ஆதரிக்கவும் இது உதவுகிறது.
ஒரு இணை உறுப்பினராக, ஐஎம்டிஆர்எஃப் திறந்த அமர்வுகளில் இந்தியா பங்கேற்கும், மற்ற கட்டுப்பாட்டாளர்களுடன் தொழில்நுட்ப தலைப்புகள் குறித்த தகவல் பரிமாற்றம், சமீபத்திய மருத்துவ சாதன ஒழுங்குமுறை உத்திகள் மற்றும் போக்குகள் குறித்த விவாதம், இந்தியாவின் அனுபவம் மற்றும் முன்னோக்குகள் பற்றிய கருத்துக்களை வழங்குதல், ஐஎம்டிஆர்எஃப் ஆவணங்களை ஒரு பகுதி அல்லது முழுமையாக மருத்துவ சாதனங்களுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கான அடிப்படையாக பயன்படுத்துதல். இது சி.டி.எஸ்.சி.ஓவின் மருத்துவ சாதன ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்தும், பெருகிய முறையில் மாறுபட்ட தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள உதவும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பதை உறுதி செய்வதோடு, அதன் மருத்துவ சாதன ஒழுங்குமுறைக்கான சர்வதேச அங்கீகாரத்தின் இலக்கைத் தொடர்ந்து பராமரிக்கும்.
இந்த உறுப்பினர் அந்தஸ்து, இந்திய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களுக்கு ஐஎம்டிஆர்எஃப் உறுப்பு நாடுகளின் ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இதன் மூலம் உலக சந்தையில் “பிராண்ட் இந்தியா” வலுப்படுத்தப்படும்.
எம்.பிரபாகரன்