குஜராத் மாநிலம் காந்திநகரில் ஹிராமணி ஆரோக்கியதாம் பகல்நேர பராமரிப்பு மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (04.10.2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் குஜராத் முதலமைச்சரும், தற்போதைய பிரதமருமான திரு நரேந்திர மோடி, குஜராத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த, பல முயற்சிகளை மேற்கொண்டதாக திரு அமித் ஷா தமது உரையில் கூறினார்.
திரு நர்ஹரி அமீன் தொடர்ந்து சமுதாயத்திற்கு சேவை செய்யவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் மூலம் குஜராத் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பை நர்ஹரி நிறுவினார் என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார். மேலும், பள்ளிகள் மூலம், சுமார் 4,000 குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கவும் அவர் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் கூறினார்.
நவீன வாழ்க்கை முறைகள், வேகமான வாழ்க்கை, மாசுபாடு போன்றவற்றால் நம் உடலைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், இவற்றுக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த நோய்களுக்கு அடிக்கடி பல சிகிச்சைகள், டயாலிசிஸ், பிசியோதெரபி, பிற சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இதற்கென இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கினார் என்றும், சுகாதாரமற்ற நிலைமைகளால் ஏற்படும் பல நோய்களைத் தவிர்க்க இது உதவியது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
அரசால் ஒரு திட்டத்தை வகுக்க முடியும் என்றாலும், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் விரிவான சுகாதாரம் சாத்தியமில்லை என்று அமைச்சர் கூறினார். இதை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினார் என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 75,000 ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த சுகாதார அமைப்பும் சுமார் 37 வெவ்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்த 37 பல்வேறு முன்முயற்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம், நாட்டின் 140 கோடி மக்களின் சுகாதார கவலைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா