மத்திய பொது நிர்வாக நிறுவனமான ஐஐபிஏ போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் கர்மயோகி திட்டத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஆளுகையின் புதிய சவால்களை சமாளிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தில்லியில் பணியாற்றும் உதவிச் செயலாளர்கள் ஐஐபிஏ-வில் உள்ள நவீன நிர்வாக அம்சங்கள் குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது அவர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட முதன்மை மிஷன் கர்மயோகி, அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான அடித்தளங்களை அமைப்பதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
திறமையான, பயனுள்ள, பொறுப்பான, வெளிப்படையான நெறிமுறை சார்ந்த ஆளுகைக்கான அரசின் மனிதவள மேம்பாட்டுக்கும், மேலாண்மைக்கும் உகந்த சூழலை உருவாக்குவதிலும் கர்மயோகி கவனம் செலுத்துவதாக இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்