மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் சுகாதாரம், வேளாண்மை, நிலைத்தன்மை மிக்க நகரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு திறன் மையங்கள் அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, உயர்மட்டக் கமிட்டியின் இணைத் தலைவரும், ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுதே, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எய்ம்ஸ், ஐஐடி தில்லி, ஐஐடி ரோபார், ஐஐடி கான்பூர் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு அவர்களின் உறுதிமொழிகள் மற்றும் ஆதரவுக்காக திரு பிரதான் ஒரு மரக்கன்று மற்றும் கல்வெட்டை வழங்கினார். சுகாதாரம், வேளாண்மை மற்றும் நிலைத்தன்மை நகரங்களின் அந்தந்த உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், திட்டங்களின் நோக்கம் மற்றும் விரிவாக்கம் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், இந்த மூன்று செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு நிறுவனங்களும் உலக பொது நலனுக்கான கோயில்களாக உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையங்கள் திறக்கப்பட்டதன் மூலம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிலப்பரப்பில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பாரதத்தின் திறமை மற்றும் ஆர்வத்துடன், வரும் காலங்களில், இந்த ஒருங்கிணைப்பாளர்கள் உலகளாவிய பொதுக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருப்பார்கள் என்றும், உலகின் தீர்வு அளிப்பவர்களாகவும் உருவெடுப்பார்கள் என்றும் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவில் இந்த மையங்களை திறன் மிக்கவையாக மாற்றுவதில், திரு. ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான உயர்மட்டக் குழுவின் கவனமான மற்றும் நேர்மையான முயற்சிகளை அவர் பாராட்டினார். செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவில் உள்ள இந்த இணை நடவடிக்கைகள் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சுற்றுச்சூழல் அமைப்புக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்றும், புதிய தலைமுறை வேலைவாய்ப்பு மற்றும் செல்வத்தை உருவாக்குபவர்களை உருவாக்க உதவும் என்றும், உலகளாவிய பொது நலனுக்கான புதிய முன்னுதாரணங்களை உருவாக்கும் என்றும் கூறினார்.
சஞ்சய் மூர்த்தி தமது உரையில், இந்த மையங்கள் வெறும் நிறுவனம் சார்ந்தவையாக மட்டும் இருக்காமல், நாடு முழுவதற்கும் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்று குறிப்பிட்டார். பலதுறை ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஒருமித்த எண்ணம் கொண்ட வளங்களிடையே சரியான வகையான ஒத்துழைப்புடன், உகந்த முடிவுகளை அடைய முடியும் என்று குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட போட்டி அடிப்படையிலான சவால் முறைகள் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் வெற்றிகரமாக கொண்டு வருவதில் திரு. தர்மேந்திர பிரதானின் தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காக அவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
திவாஹர்