மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் இன்று விவசாயிகள், வேளாண் அமைப்புகள், அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். வேளாண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடன் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக திரு சவுகான் கூறினார். ரபி பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று எடுத்த முடிவு குறித்தும் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். வேளாண் அமைப்புகள் பல முக்கிய அம்சங்களை விவாதித்து பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கின. ஒன்று, இரண்டு, இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் எப்படி வேளாண் செய்ய வேண்டும், அதில் எப்படி லாபகரமான விவசாயம் செய்வது என்பது குறித்து தகவல் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு ஏக்கர் நிலத்தில் லாபகரமான விவசாயம் செய்யும் விவசாயிகளையும் விவசாயிகள் உதாரணமாக சுட்டிக் காட்டினார்கள். தண்ணீர் வழங்குதல், உர பயன்பாடு, மண்ணை ஆரோக்கியமாக மாற்றுதல், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், சர்க்கரை ஆலைகள் மூடல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் விவாதித்தனர். சிறுதானியங்களை ஊக்குவிப்பது குறித்தும் விவசாயிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
விவசாயிகளின் ஆலோசனைகளை தீவிரமாக பரிசீலித்து அவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பேன் என்று மத்திய அமைச்சர் கூறினார். அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் 23 பயிர்களையும் கொள்முதல் செய்யும் முடிவை எடுத்த ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனிக்கு மத்திய அமைச்சர் திரு சவுகான் நன்றி தெரிவித்து பாராட்டினார்.
திவாஹர்