மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உள்துறை இணையமைச்சர் திரு பந்தி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மேனன், உளவுப்பிரிவு இயக்குநர் திரு தபன் குமார் டேகா, மத்திய ஆயுதக் காவல்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கிபித்து வரையிலும் இந்தியாவின் எல்லைகளை போலீஸ் படைகளின் வீரர்கள் பாதுகாப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில் கூறினார். பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும், பண்டிகைக் காலங்களிலும், பேரிடர்களின்போதும், கடும் வெயிலிலும், மழையிலும், குளிர் அலையிலும் ராணுவ வீரர்கள் நம்மையும், எல்லைகளையும் எப்போதும் பாதுகாப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய போலீஸ் நினைவிடத்தின் மைய அமைப்பு, கடமையில் உள்ள நமது ராணுவ வீரர்களின் உறுதியையும், அவர்களின் ஆழ்ந்த தேசபக்தியையும், உச்சநிலை தியாகத்தை செய்ய அவர்களின் விருப்பத்தையும் குறிக்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். 1959 ஆம் ஆண்டு இதே நாளில், 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சீன இராணுவத்தை தைரியமாக எதிர்கொண்டு தங்கள் உயிரை தியாகம் செய்தனர். பிரதமர் ஆன பிறகு, இந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தில்லியின் மையப்பகுதியில் ஒரு போலீஸ் நினைவிடத்தை கட்ட திரு நரேந்திர மோடி முடிவு செய்ததாக திரு ஷா கூறினார். இந்த நினைவுச்சின்னம் நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், இன்று நாம் அனுபவிக்கும் பாதுகாப்பும் முன்னேற்றமும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உச்சநிலை தியாகத்தால் என்பதை குடிமக்களுக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்காக 36,468 காவலர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் தேசம் முன்னேற்றம் அடைய முடிந்தது என்றும் அவர் கூறினார். கடந்த ஓராண்டில் 216 காவலர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதாகவும், இந்த துணிச்சலான வீரர்களுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாடு முழுவதும் உள்ள காவல் துறையினர் உறுதியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நாட்டின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நமது குற்றவியல் நீதிமுறை உலகின் அதி நவீன நீதி முறையாக மாறும் என்றார். நாட்டின் எந்த மூலையிலும் பதிவு செய்யப்பட்ட எந்த குற்றத்திற்கும் உச்ச நீதிமன்றம் வரை மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த மூன்று புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீதி பெறுவதில் தாமதங்களை போக்குவதற்கான பாதை உள்ளது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
2015-ம் ஆண்டில் 3100 கோடி ரூபாய் செலவில் 13,000 வீடுகளும் 113 ராணுவக் குடியிருப்புகளும் கட்டுவதற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்தது என்றும் இதில் 11,276 வீடுகளும் 111 ராணுவக் குடியிருப்புகளும் மார்ச் 2024 வாக்கில் கட்டி முடிக்கப்பட்டன என்றும் திரு ஷா கூறினார். சிஏபிஎஃப் இ-ஆவாஸ் இணைய போர்டல் மூலம் காலி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதனுடன், எம்பிபிஎஸ்-ல் 26 இடங்களும், பிடிஎஸ்-ல் 3 இடங்களும் சிஏபிஎஃப் பணியாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த இழப்பீட்டுத் தொகை முதல் மத்திய கருணைத் தொகை வரை அதிகரிப்பது நமது வீரர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா