மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங்கை சந்தித்தார்.
எதிர்கால சந்ததியினரின் திறன்களை வளர்ப்பதற்கான திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் பயிற்சியில் ஒத்துழைப்பு குறித்து, திரு கான் கிம் யோங்குடன் திரு பிரதான் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கை சந்தித்த திரு பிரதான், இரு நாடுகளுக்கும் இடையே பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை உயர்த்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங்கையும், திரு பிரதான் சந்தித்து, கல்வியின் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணனையும் அமைச்சர் சந்தித்து இந்தியா-சிங்கப்பூர் அறிவுசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
‘எதிர்காலப் பள்ளிகளை’ உருவாக்குவதற்கான சிறந்த நடைமுறைகளைக் கண்டறிய, சிங்கப்பூரில் உள்ள ஹ்வா சோங் நிறுவனத்திற்கு (HCI) திரு தர்மேந்திர பிரதான் பயணம் மேற்கொண்டார். மாணவர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், கற்றல் விளைவுகளை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான பலம், திறமைகள் மற்றும் படைப்பாற்றல் முயற்சிகளை வளர்ப்பதற்கும் AI போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை, பள்ளி பயன்படுத்துவதை அவர் பாராட்டினார். இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கல்வி அணுகுமுறைகளுக்கும் எச்சிஐ-ல் பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் மாணவர் மேம்பாட்டு உத்திகளுக்கும் இடையே, பல ஒற்றுமைகள் இருப்பதையும் திரு பிரதான் கவனித்தார். மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதன் மூலம், பொறுப்புள்ள உலகளாவிய குடிமக்களை வடிவமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சரின் சிங்கப்பூர் பயணம், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு 2024 அக்டோபர் 20 முதல் 26 வரை மேற்கொண்டுள்ள பயணம், கல்வியில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியமான பகுதிகளில் ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எம்.பிரபாகரன்