சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் குடியரசுத்தலைவரை சந்தித்தார்.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், இன்று (அக்டோபர் 22, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் டாக்டர் ஹென்னை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவும் சிங்கப்பூரும் இருதரப்பு ஒத்துழைப்பில் வளமான வரலாற்றைக் கொண்டவை என்றும், பிரதமர் மோடியின் சமீபத்திய சிங்கப்பூர் பயணம் மற்றும் இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது சுற்று வட்டமேஜை கூட்டம் ஆகியவை, இதற்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளன என்றும் கூறினார்.  இந்த நட்புறவு விரிவான உத்திசார் கூட்டாண்மையாக  வளர்ந்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதலாவது ஆசியான் – இந்தியா கடல்சார் பயிற்சியை வெற்றிகரமாக இணைந்து நடத்தியதற்காக, சிங்கப்பூருக்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், வரவிருக்கும் கூட்டுப் பயிற்சிக்காக இருதரப்பிலும் உள்ள ஆயுதப்படைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் சமீபத்திய நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றிலிருந்து பயனடைய இரு நாடுகளின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுக்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தையும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். 

Leave a Reply