நிலைத்தன்மை மற்றும் திறமையான இயற்கை வள மேலாண்மையை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நிலக்கரித் துறையின் அரையாண்டு மதிப்பாய்வின் போது நிலக்கரித் துறையில் சுரங்க கழிவை ஆதாயகரமாகப் பயன்படுத்துவது குறித்த உயர்மட்ட நிபுணர் குழுவின் (HPEC) அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், நிலக்கரி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
உயர்மட்ட நிபுணர் குழுவில் ஐந்து மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக் மற்றும் நிலக்கரி நிறுவனங்களின் பல்துறை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளின் போது பாரம்பரியமாக கழிவுகளாக நிராகரிக்கப்படும் மண், பாறை மற்றும் தாதுக்களை ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்துவதற்கான புதுமையான வழிமுறைகளை அடையாளம் காணும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுரங்க கழிவை ஒரு மதிப்புமிக்க வளமாகப் பயன்படுத்துவதற்கான விரிவான கட்டமைப்பை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. வரலாற்று ரீதியாக கழிவுகளாகக் காணப்பட்டவை இப்போது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் திறனைக் கொண்ட ஒரு சொத்தாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு ‘முழு சுரங்க’ அணுகுமுறைக்கு வித்திட்டுள்ளது. இது பொருளாதார மதிப்புக் கூட்டு சங்கிலித் தொடரில் சுரங்க கழிவை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நிலையான சுரங்க நடைமுறைகளுக்கு பங்களிக்கிறது.
திவாஹர்