மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசு பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சவுத் பிளாக்கில் பிரதமர் அலுவலக (பி.எம்.ஓ) ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு குறித்த சிறப்பு அமர்வில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்துதல், செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். பிரிவு அதிகாரிகள் முதல் முதன்மைச் செயலாளர், பிரதமர், மத்திய அமைச்சர் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகள் பங்கேற்ற இந்த அமர்வில், அவர்கள் மேம்பட்ட கருத்துக்களைக் கற்றுக்கொண்டனர்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி.கே.மிஸ்ரா, பிரதமரின் ஆலோசகர்கள், திரு அமித் காரே, திரு தருண் கபூர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் அடங்கிய அமர்வில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுகாதாரம், வேளாண்மை மற்றும் பொது சேவை வழங்கல் போன்ற முக்கிய துறைகளை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்ற முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
திவாஹர்