மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரங்களில் டானா புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் இந்திய கடலோரக் காவல்படை தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.

டானா புயல் 2024 அக்டோபர் 24-25 தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரங்களில் கரையைக்கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வடகிழக்கு பிராந்திய இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி)  கடலில் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  நிலைமையை ஐ.சி.ஜி. உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. புயல் தாக்கத்தால் ஏற்படும் எந்தவொரு அவசரநிலையையும் கையாள்வதற்கான தயார்நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வழக்கமான வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை ஒளிபரப்ப மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் உள்ள கப்பல்கள், விமானங்கள் மற்றும் தொலைதூர இயக்க நிலையங்களை ஐ.சி.ஜி பணியமர்த்தியுள்ளது. இந்த எச்சரிக்கைகள் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்பி பாதுகாப்பான  இடத்தில்  தங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஐ.சி.ஜி அதன் கப்பல்களையும், விமானங்களையும் கடலில் எந்தவொரு அவசர சூழ்நிலையையும் விரைவாக எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு நிலைநிறுத்தியுள்ளது. கூடுதலாக, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள எதிர்வினையை உறுதி செய்வதற்காக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஐ.சி.ஜி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புயல் கரையைக் கடந்து செல்லும் வரை கடலுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்கரையோரத்தில் உள்ள மீனவ சமூகங்களுக்கு கிராமத் தலைவர்கள் உட்பட பல்வேறு அலைவரிசைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய கடலோர காவல்படை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்  உள்ளது.  உதவி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வழங்க பேரிடர் நிவாரண குழுக்கள் மற்றும் உபகரணங்கள் தயாராக உள்ளன.

Leave a Reply