குஜராத்தின் ஆனந்தில் ஸ்ரீ திரிபுவன்தாஸ் படேலின் பிறந்த தினம் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் போது ரூ .300 கோடி மதிப்புள்ள பல விவசாயிகள் நலத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு அமித் ஷா, கூட்டுறவுத் துறை ஒரு லட்சம் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பால் பண்ணைகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும், இரண்டாவது வெண்மைப் புரட்சி பால் துறையை விரிவுபடுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
திரிபுவன்தாஸ் அவர்களின் கடின உழைப்பு மிகுந்த வாழ்க்கையை விவரிப்பது கடினமானது என்று திரு ஷா கூறினார். திரிபுவன்தாஸ் படேல் தனது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தனித்துவமான தொலைநோக்குடன் பணியாற்றினார். தன்னலம் கருதாமல் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அவர் பாடுபட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். திரிபுவன் தாஸ் அவர்களால்தான் நாட்டில் 5 கோடி கால்நடை வளர்ப்போர் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும், இன்று நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள், குறிப்பாக பெண்கள் செழிப்பாக உள்ளனர் என்றும் திரு ஷா கூறினார். அமுல் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையானது பெண்களுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைத்தது என்றும் கூறினார்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமானது ஊரகத் துறையையும் நாட்டின் வளர்ச்சியையும் விரைவுபடுத்தியதுடன், விவசாயத்தை தற்சார்புடையதாக ஆக்கியது என்று திரு அமித் ஷா கூறினார். திரிபுவன் அவர்கள் தேசிய பால்வள மேம்பாட்டு வங்கிக்கு அடிக்கல் நாட்டினார் என்றும், தற்போது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே மிகப் பெரிய நிறுவனமாக அது மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். அமுல் நிறுவனம் தற்போது 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆண்டு வர்த்தகத்தை நடத்தி வருவதாகவும், தொடக்கத்தில் பெண்களிடமிருந்து பெறப்பட்ட மிகக் குறைந்த மூலதனத்தில் கட்டமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 1964 ஆம் ஆண்டில், லால் பகதூர் சாஸ்திரி தேசிய பால்வள மேபாட்டு வாரியத்தை நிறுவ முடிவு செய்தபோது, அது ஒரு நாள் பெரிய ஆலமரமாக வளரும் என்று யாருக்கும் தெரியாது என்று திரு ஷா கூறினார்.
எம்.பிரபாகரன்