ஜெர்மனியின் துல்லியமான பொறியியல் நுட்பத்துடன் இந்தியாவின் திறனும் இணையும் போது உலகிற்கு பயனளிக்கும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

ஜெர்மனியின் துல்லியமான பொறியியல் கலையும், கட்டமைப்பு, டிஜிட்டல் அல்லது சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் திறனும் இணைந்து உலகிற்கு அசாதாரணமான ஒன்றை உருவாக்க உதவும் என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஜெர்மன் வர்த்தகத்தின் 18-வது ஆசிய பசிபிக் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர், செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது முதல் குறைக்கடத்திகள் வரை, நாட்டின் துடிப்பான புத்தாக்க சூழல் அமைப்பை வளர்ப்பது முதல் பசுமை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான ஒருங்கிணைப்பு முன்னோடியில்லாத வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய இந்தியா வலுவான பேரினப் பொருளாதார அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள வணிகர்களின் எதிர்காலத்திற்கான சீர்திருத்தம், பின்னடைவு மற்றும் தயார்நிலை ஆகியவை இங்கு உள்ளதாக கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது குறித்துப் பேசிய திரு கோயல், 2015-ல் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP21) இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார். பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (சிசிபிஐ) தற்போது 7 வது இடத்தில் உள்ள இந்தியா, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளையும் (என்டிசி) விஞ்சும் பாதையில் உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக, ஜெர்மன் வர்த்தகத்திற்கான ஆசிய பசிபிக் குழு மற்றும் இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபைக்கு நன்றி தெரிவித்த திரு கோயல், ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலக மக்கள் தொகையில் 60%-ஐ உள்ளடக்கியது என்றும், 2030-ம் ஆண்டில், உலகில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆசியாவில் வசிப்பார்கள் என்றும் கூறினார்.  மக்கள்தொகையில் ஏற்படும் இந்த மாற்றம் தனது எல்லையை விரிவுபடுத்தவும் உருவாகி வரும் தொழில் பிரிவுகளில் ஆதாயம் ஈட்டவும் வணிகர்களுக்கு  வளமான பின்னணியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply