மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், ஸ்ரீ விஜயபுரத்தில் இன்று (25.10.2024) அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் திரு டி கே ஜோஷி இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் யூனியன் பிரதேச நிர்வாகம், மத்திய அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மின்சார இருப்பு, மின் உற்பத்திக்கும், தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளி ஆகியவற்றின் தற்போதைய நிலை இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், முக்கிய சவால்கள் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு. மனோகர் லால், இந்த யூனியன் பிரதேசத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆதாரங்களை, குறிப்பாக காற்றாலை மின்சக்தியின் பங்கை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எத்தனால் அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தி போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.