விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் நடிகர் விஜய் தாம் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். கட்சியின் கொள்கை, செயல்திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தொண்டர்கள் அளித்த பரிசு பொருட்களாக வெள்ளியால் ஆன வீரவாள், பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் உள்ளிட்டவற்றை நடிகர் விஜய் ஏற்றுக் கொண்டார்.
இங்கே ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்கப் போவது இல்லை. அதற்காக அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க போவதும் இல்லை. இப்போது என்ன தேவை, என்ன பிரச்னை, எப்படி அதை தீர்ப்பது என்று யோசித்து மக்களிடம் சொன்னால் போதும். இது நமது கடமை.ஈ.வெ.ரா., நமது கொள்கைத் தலைவரா என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். அந்த பெயிண்ட் தடவும் கூட்டம் பற்றி பிறகு பேசுகிறேன்.
வழிகாட்டி
யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பேரறிஞர் அண்ணாதுரை சொன்னது போன்று ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஈ.வெ.ரா.வுக்கு பின்னர் எங்கள் கொள்கை வழிகாட்டி தலைவர் காமராஜர். மதசார்பின்மையை ஆழமாக விதைத்தவர்.
அண்ணல் அம்பேத்கர் என்ற பெயரை கேட்டால் சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் நடுங்கி போவார்கள். வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் போன்ற பெண்களை கொள்கை வழிகாட்டி தலைவர்களை ஏற்று அரசியல் களத்தில் வரும் முதல் கட்சி த.வெ.க., தான்.
இது போன்று பல்வேறு அரசியல் கொள்கைகள் மற்றும் குறிக்கோள் பற்றியும் நடிகர் விஜய் பேசினார்.
கே.பி.சுகுமார்