இந்திய கடலோர காவல்படை ஒரே நேரத்தில் கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டு விரைவு ரோந்து கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஆதம்யா’ மற்றும் ‘அக்ஷர்’ ஆகிய இரண்டு கப்பல்கள் 60% உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவையாகும்.
ரூ.473 கோடி செலவில் கட்டப்படும் இதுபோன்ற எட்டு எஃப்.பி.வி. கப்பல்களுக்கு கோவா ஷிப்யார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றின் முதன்மை பங்குடன், இந்த மேம்பட்ட கப்பல்கள் கடல் சொத்துக்கள் மற்றும் தீவு பிரதேசங்களை பாதுகாக்க இந்தியக் கடலோர காவல் படைக்கு உதவும்.
ஒவ்வொரு கப்பலும் 52 மீ நீளம், 8 மீ அகலம், அதிகபட்ச வேகம் 27 கடல் மைல்களாகும். அமெரிக்க கப்பல் பணியகம் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் கடுமையான இரட்டை வகுப்பு சான்றிதழின் கீழ் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
முதன்முறையாக, அதிநவீன கப்பல் தூக்கும் முறையைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்கள் தொடங்கப்பட்டன. தலைமை இயக்குநர் ஐ.சி.ஜி பரமேஷ் சிவமணி மற்றும் முன்னாள் வீரர்கள் முன்னிலையில் திருமதி பிரியா பரமேஷ் அவர்களால் ‘அதர்வ வேதம்’ கோஷங்களுக்கு இடையே கப்பல்களுக்கு பெயரிடப்பட்டது.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர், கடலோர காவல்படையின் அனைத்து கப்பல் கட்டும் தேவைகளும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதில் ஜிஎஸ்எல் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் முயற்சிகளை பாராட்டினார். இந்த முக்கியமான மைல்கல்லை எட்டியதற்காக ஜி.எஸ்.எல் ஊழியர்களை வாழ்த்திய அவர், பாதுகாப்பில் ‘தற்சார்பை’ நோக்கிய பயணம் சரியான ஆர்வத்துடன் தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த விழாவில் ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரஜேஷ் குமார் உபாத்யாய் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, ஜிஎஸ்எல் மற்றும் வகைப்படுத்தல் சங்கங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா