அரசியலமைப்பு தினம் 2024-ஐ, ராஜீவ் காந்தி பவனில் உள்ள விமானப் பூங்காவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இத்துறையின் இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் முன்னிலையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடியது. இந்த நிகழ்வு இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் நீடித்த மதிப்புகளுக்கும் மரியாதை செலுத்துவதாக இருந்தது.
அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திரு ராம் மோகன் நாயுடு, “நமது அரசியல் சட்டம் நமது சுயமரியாதை” பிரச்சாரத்தில் அனைவரும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் ஆழமான தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஸ்ரீகாகுளம் போன்ற கிராமப்புற தொகுதியில் இருந்து வந்திருந்தாலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பதவிக்கு உயர அது தனக்கு எவ்வாறு அதிகாரம் அளித்தது என்பது பற்றி அவர் பேசினார். சாதி, இன, பாலின வேறுபாடின்றி ஒவ்வொரு குடிமகனும் தேச நிர்மாணத்திற்கு பங்களிக்க ஜனநாயகத்தின் சக்தியை அரசியலமைப்பு எவ்வாறு உள்ளடக்கியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ஓராண்டு கொண்டாட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார். “பிரதமர் திரு நரேந்திர மோடி, தன்னை ‘முதன்மை சேவகர்’ என்று அழைத்துக் கொள்கிறார், சமத்துவக் கொள்கையை நிலைநிறுத்துவதன் மூலம் டாக்டர் அம்பேத்கரின் பாதையைப் பின்பற்றி, தனது பார்வை மற்றும் செயல்களின் மூலம் ஜனநாயகத்தின் உணர்வை உண்மையிலேயே வெளிப்படுத்தியுள்ளார். ‘ அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற அவரது மந்திரம் அரசியலமைப்பின் உள்ளடக்கத்தையும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையையும் பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் அரசியலமைப்பின் முக்கிய பங்கை ஒப்புக் கொண்ட அமைச்சர், விமானிகள் முதல் பொறியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வரையிலான பணியாளர்களை உள்ளடக்கிய விமானப் போக்குவரத்தில் 25 சதவீத பெண்களின் பங்களிப்பை அடைவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
திவாஹர்