அஹில்யா நகரில் உள்ள இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை மையம் மற்றும் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி காலாட்படையின் நான்கு படைப்பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடிகளை வழங்கினார். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்தக் கொடி வழங்கப்படுகிறது. காலாட்படையின் 26 மற்றும் 27-வது படைப்பிரிவுகள் மற்றும் காவலர் படையின் 20 மற்றும் 22 படைப்பிரிவுகளுக்கு இந்தக் கொடி வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இது ராணுவத்தின் இளைய படைப்பிரிவுகளுக்கு பெருமிதம் அளிப்பதாக உள்ளது. இந்த விழாவில் முன்னாள் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சிவில் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் காலாட்படை மற்றும் குதிரைப்படையின் அணிவகுப்பு மரியாதையை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஏற்றுக் கொண்டார். சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவினருக்கு அவர்களது அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் சார்பில் சிறப்பு கொடிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமை தளபதி காலாட்படை பிரிவு, 1979-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய ராணுவத்தின் நவீன மற்றும் தொழில்முறை சார்ந்த சக்தியாக திகழ்கிறது. உலகளவில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவம் நவீனமயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த நவீனமயமாக்கல் முயற்சிகள் தற்சார்பு இலக்கை எட்டும் நோக்கில் முன்னேற்றப்பாதையில் செல்வதாக கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா