குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 28, 2024) தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் நட்பு நாடுகளின் சாத்தியமான தலைவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அதிகாரிகளுக்கும் பயிற்சி மற்றும் கல்வி அளிப்பதில் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறினார். கடந்த ஏழு தசாப்தங்களாக, நடுத்தர நிலை அதிகாரிகளை தொழில்ரீதியாக தயார்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகித்துள்ளது. இது ஒரு கலப்பு பல்-சேவை மற்றும் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகள் குழு மற்றும் தொழில்முறை வளமான ஆசிரியர்களைக் கொண்ட தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது.
இந்திய ஆயுதப் படைகள் அனைவராலும் மதிக்கப்படுகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது நாட்டின் எல்லைகளையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். நமது தேசிய நலன்களை தொடர்ந்து பாதுகாத்து வரும் நமது பாதுகாப்புப் படைகள் குறித்து தேசம் எப்போதும் பெருமிதம் கொள்கிறது. எப்போதும் தேசம் முதலில் என்ற உணர்வுடன் பணியாற்றும் நமது பாதுகாப்புப் படையினர் உயர்ந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
முப்படைகளிலும் பல்வேறு பிரிவுகளுக்கு பெண் அதிகாரிகள் தற்போது தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றுவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வலிமை மற்றும் பங்களிப்பு அதிகரித்து வருவது அனைவருக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். ஆயுதப் படைகளில் அதிக பெண்கள் சேருவதைக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அங்கு அவர்கள் விதிவிலக்கான திறன்களை வெளிப்படுத்துவதோடு, அறியப்படாத பிரதேசங்களில் புதிய சாதனை படைக்க முடியும் என்றார்.
இந்தியா எழுச்சி பெற்று வருவதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது வளர்ச்சியை உலகம் அங்கீகரித்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வருங்கால சவால்களை எதிர்கொள்ள ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்க, இந்தியா உள்நாட்டுமயமாக்கல் மற்றும் சுயசார்பை நோக்கி நகர்ந்து வருகிறது. நமது நாடு ஒரு பெரிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது, மேலும் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாகவும், பெரிய பாதுகாப்பு ஏற்றுமதியாளராகவும் மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.
வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இணையப் போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற புதிய தேசிய பாதுகாப்பு சவால்களுக்கும் நாம் தயாராக வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினை புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது, அதைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க வேண்டும். தீவிர ஆராய்ச்சியின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட அறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த பாடநெறி பயிற்சி அதிகாரிகள் அனைவரையும் உயர் பொறுப்புகளுக்கும், சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட கையாளக்கூடிய உத்திசார்ந்தவர்களாகவும் தயார்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்