இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ஹரிமாவ் சக்தி மலேசியாவின் பென்டாங் முகாமில் தொடங்கியது.

இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 4-வது பதிப்பு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் உள்ள பென்டாங் முகாமில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி 2024 டிசம்பர் 2முதல்15வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

78 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் மஹர் படைப்பிரிவின் ஒரு பிரிவு பங்கேற்கிறது. மலேசிய அரச படைப்பிரிவைச் சேர்ந்த 123 வீரர்கள் மலேசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கூட்டுப் பயிற்சி ஹரிமாவ் சக்தி என்பது இந்தியாவிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும்  ராணுவப்பயிற்சி நிகழ்வாகும். இதற்கு முந்தைய பயிற்சி நவம்பர் 2023-ல் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோய் கன்டோன்மென்ட்டில் நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பதிப்பின் கீழ் காட்டுப் பகுதிகளில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பினரின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி வனச் சூழலில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.

இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக விரிவுரைகள், செயல்விளக்கங்கள் மற்றும் காட்டு நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகளின் நடைமுறைகள் உட்பட இரு படைகளுக்கும் இடையிலான பயிற்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இறுதிக் கட்டத்தில் இரு நாட்டு ராணுவங்களும் தீவிரமாகப் பங்கேற்கும் ஒத்திகை, தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் தாக்குதல் நடத்துதல், துறைமுகத்தை ஆக்கிரமித்தல், ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளில் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஹரிமாவ் சக்தி பயிற்சி இரு தரப்பினரும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வியூகங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் சிறந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள உதவும். இது இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவும். இந்தக் கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும்.

Leave a Reply