வெள்ள பாதிப்புகள்: நிவாரணப் பணிகளுக்குமத்திய அரசு உடனே நிதி ஒதுக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்ததை விட மிகக்கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியையே தமிழக அரசு எதிர்பார்த்திருக்கும் நிலையில், தேவையை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்திற்கு நிதி வழங்க எந்த விதியும், நடைமுறையும் தடையாக இருக்கக்கூடாது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் புதுச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், கரைக்கு வந்த பிறகு பல இடங்களில் ஸ்தம்பித்து நின்று விட்டதாலும், கரைக்கு வந்து வெகு நேரமாகியும் வலுவிழக்காததாலும் பெய்த தொடர் மழையால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மனித உயிரிழப்புகள், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், கால்நடை உயிரிழப்புகள், கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். முதல் 3 வகையான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ள நிலையில், கட்டமைப்புகளை சரி செய்ய முதலீடுகள் செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் பெரும் நிதி தேவைப்படும். அது இன்னும் மதிப்பிடப்படவில்லை.

நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இன்னும் பல இடங்களுக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு பாதிப்புகள் கடுமையாக உள்ளன. மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்காலிகமாக செப்பனிடவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் பெருந்தொகை தேவைப்படுகிறது. அதற்காக உடனடியாக ரூ.2,000 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அடுத்தக்கட்டமாக, பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் உயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல், கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் மறு உருவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றுக்கு பெருந்தொகை தேவைப்படும் நிலையில், அந்த சுமையை மாநில அரசால் மட்டுமே சமாளிக்க முடியாது. அதில் ஒரு பகுதியை மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால், அதை முடிவு செய்வதற்காகவும், மழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காகவும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவை மத்திய அரசு அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தென் மேற்கு பருவ மழை, வடகிழக்குப் பருவமழை என இரு வகையான பருவமழைகளால் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. புயல், மழை, வறட்சி என அனைத்து வகையான இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்படும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண உதவிகளைப் பெறுவது என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கசப்பான அனுபவமாகவே உள்ளது. தமிழக அரசால் கோரப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவானத் தொகையைத் தான் மத்திய அரசு வழங்கி வருகின்றன.

கடந்த ஆண்டின் இறுதியில் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. அதன் பிடியிலிருந்து தமிழ்நாடு மீள்வதற்கு முன்பாகவே தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இரு பாதிப்புகளுக்கும் சேர்த்து ரூ.19,692 கோடி நிவாரண உதவியாக கோரப்பட்ட நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு வெறும் ரூ.682 கோடியை மட்டும் தான் மத்திய அரசு வழங்கியது. அதுமட்டுமின்றி, இந்தப் பேரிடர்களைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இது சரியல்ல.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவது தான் பேரிடர் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் உறவுக்கு இலக்கணமாக இருக்க வேண்டும். 15&க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள், பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு, பல லட்சம் ஏக்கரில் பயிர்களுக்கு பாதிப்பு, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு சேதம் என கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து மீளவும், கட்டமைப்புகளை சீரமைக்கவும் தேவையான உதவிகளை வழங்குவது மட்டும் தான் மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.அதற்கேற்ற வகையில் விதிகள் தளர்த்தப்பட வேண்டுமே தவிர, விதிகளைக் காரணம் காட்டி நிவாரண உதவிகள் மறுக்கப்படவோ, குறைக்கப்படவோ கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

எனவே, தமிழ்நாட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.2,000 கோடியையும், நிவாரண உதவிகள், மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தமிழக அரசால் கோரப்படும் நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். அதன் மூலம் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட கொடிய பேரழிவுகளில் இருந்து தமிழ்நாடு மீண்டு வருவதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply