தமிழக அரசு புயல் மழை வெள்ள பாதிப்புக்கு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல!- ஜி.கே.வாசன் அறிக்கை.

ஃபெஞ்சல் புயலால், மழையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தை இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்

தமிழக அரசு புயல் மழை வெள்ளத்தால் மக்கள், கால்நடைகள் அடைந்துள்ள பாதிப்புக்கு, உயிரிழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். ஆனால் அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 % அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல.

காரணம் கடன் வாங்கி விவசாயம் செய்த, கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல.

அதாவது தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மழை வெள்ள புயல் பாதிப்புக்கான நிவாரணமானது மிகவும் குறைவானது என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய்
நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணமானது பாதிக்கப்பட்ட மக்கள் அடைந்த இழப்பீட்டிற்கு ஈடாகாது.

இந்நிலையில் தமிழக அரசு புயல் மழை வெள்ள பாதிப்புகளை முறையாக, முழுமையாக, சரியாக கணக்கீடு செய்ய வேண்டும். மழை வெள்ள பாதிப்பு சம்பந்தமாக விவசாயிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் முழு விவரத்தையும் கேட்க வேண்டும். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்ப நிவாரணத்தை
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் கொடுப்பதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு – மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply