ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் திரு தல்ஜித் சிங் சவுத்ரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் தமது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் கூறினார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எல்லைப் பாதுகாப்புப் படை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். 1965 டிசம்பர் 8 முதல், நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு சிறந்த சாதனையைப் படைத்து வருகிறது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டபோது 25 பட்டாலியன்களாக இருந்த நிலையில், தற்போது 193 பட்டாலியன்களாக வளர்ந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று அவர் கூறினார். 2.7 லட்சம் வீரர்களுடன், பிஎஸ்எஃப் உலகின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படையாக உள்ளது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

நாட்டின் முதல் பாதுகாப்பு வரிசை என்ற வகையில், 1992 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றும், அவர்களில் 1330 பேருக்கு இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதில் 1 மகா வீர் சக்ரா, 6 கீர்த்தி சக்ரா, 13 வீர் சக்ரா, 13 ஷௌர்ய சக்ரா, 56 சேனா பதக்கங்கள், 1,241 போலீஸ் பதக்கங்கள் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், எல்லைப் பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கவும், கிராமங்களில் நலத்திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்துவதை உறுதி செய்யவும், நாட்டின் முதல் எல்லைகளில் உள்ள கிராமங்களில் ரயில், சாலை, நீர்வழிகள், தொழில்நுட்பம் மூலம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நில துறைமுகங்கள் மூலம் சட்டபூர்வ வர்த்தகம், மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply