சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு பொது இடங்களில் புகைப் பிடிப்பது தான் காரணம் என்று மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019&ஆம் ஆண்டின் தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்திற்கான அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3500 & 4000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், புகைப்பழக்கம் உள்ளவர்களை மட்டும் தான் நுரையீரல் புற்றுநோய் தாக்கும் என்ற பொதுவான எண்ணத்திற்கு மாறாக, வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட புகைப் பிடிக்காதவர்களும், பெண்களும் கூட நுரையீரல் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தான் என்று அந்த ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது. சென்னையில் வாழும் ஒரு லட்சம் பேரில் 8.1 பேர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டம் லட்சத்திற்கு 7.3 பேர் என்ற அளவுடன் இரண்டாவது இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 6.5 பேருடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டம் 6.4 பேருடனும், காஞ்சிபுரம் மாவட்டம் (இப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கியது) 6.1 பேருடனும் முறையே 4 மற்றும் 5&ஆம் இடத்தை பிடித்திருக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்புகள், வேதித் தொழிற்சாலைகளில் வெளிவரும் நச்சுப் பொருட்கள் காற்றில் கலப்பது என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முதன்மைக் காரணம் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் என்று அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு வள மையத் தலைவரும், புற்றுநோய் மருத்துவருமான சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கடுமையான எதிர்ப்புகளையும் மீறி 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 2&ஆம் தேதி முதல், எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தினேனோ, அந்த நோக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர் விடும் புகையை சுவாசிப்பதால் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான், பல ஆண்டுகள் போராடி அந்த சட்டத்தைக் கொண்டு வந்தேன்.
அந்த சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத் தான் உள்ளது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசும் அந்த சட்டத்தை முறையாக பயன்படுத்தத் தவறியதன் விளைவு தான் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிர்ச்சியளிக்கும் வகையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்திருப்பதற்கு 2008&ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டம் 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 2&ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கடந்த மார்ச் 31&ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதில் இருந்தே இச்சட்டம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.
இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 13.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 2.20 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பொது இடங்களில் புகைப்பதை அனுமதிப்பதால் ஏற்படும் பெருங்கேடு இது என்பதால் தான் அதைத் தடுக்கும் வகையில் 2008-ஆம் ஆண்டு சட்டத்தைக் கொண்டு வந்தேன். ஆனால், அதை செயல்படுத்துவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருப்பதை மன்னிக்கவே முடியாது.
பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தமிழக அரசு தடுக்கத் தவறியதால் தான், பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அலட்சியம், செயலற்ற தன்மை போன்ற தமிழ்நாடு அரசின் குற்றத்திற்கு அப்பாவி மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? இனியும் இந்தக் கொடுமை நீடிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாட்டின் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மிகக் கடுமையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா