நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இது செயல்பாட்டு தயார்நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு, கவுதம் புத்த நகர் மக்களவை உறுப்பினர் டாக்டர் மகேஷ் சர்மா மற்றும் ஜெவர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. திரேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இண்டிகோவால் இயக்கப்படும் இந்த விமானம் பிற்பகலில் தரையிறங்கியது. விமானத்தின் மீது நீரை பீய்ச்சியடித்து, பெரும் கைத்தட்டலுடன் அங்கிருந்தவர்கள் விமானத்தை வரவேற்றனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திருமதி வும்லுன்மாங் வால்ணம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் விபின் குமார், உத்தரப்பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் திரு எஸ் பி கோயல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சோதனை விமானம் விமான நிலையத்தின் அணுகுமுறை மற்றும் புறப்படும் நடைமுறைகளை உறுதிப்படுத்தியது. வழிசெலுத்தல் உதவிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் துல்லியத்தை உறுதி செய்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த குழுவின் முயற்சிகளைப் பாராட்டியதோடு, ஜெவர் விமான நிலையம் இந்தியாவில் விமானப் பயணம் மற்றும் பிராந்திய இணைப்பை மாற்றியமைக்க தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டில் ஆண்டுதோறும் 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட முனையத்துடன் திறக்கப்படும் விமான நிலையம், அதன் வடிவமைப்பு, கைவினைத்திறன் மற்றும் பயணிகள் சேவைகள் மூலம் உத்தரபிரதேசத்தின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் போது உலகத் தரம் வாய்ந்த வசதியாக செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்