க(த)ண்ணீரில் தத்தளிக்கும் திருச்சி! இயல்பு வாழ்க்கை பாதிப்பு! பொதுமக்கள் அவதி.

கடந்த 72 மணி நேரமாக பெய்த தொடர் கனமழை காரணமாக, திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட புறநகரில் உள்ள பல பகுதிகளில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், காவல் நிலையங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களைச் சுற்றி வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதுார் அன்புநகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீடுகளில் நீர் புகுந்தது. மேலும், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள நேஷனல் காலேஜில் இருந்து கருமண்டபம் உள்ளிட்ட அதை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் தற்போது தண்ணீரில் தத்தளித்து வருகிறது. திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இதைத் தவிர புதுக்கோட்டை சாலை, ஜெயலலிதா நகர், மன்னார்புரம் கிருஷ்ணமூர்த்தி நகர், சிம்கோ மீட்டர், தொண்டைமான் காலனி, உறையூர் லிங்கம் நகர், மாநகராட்சி, 62வது வார்டில் உள்ள ஹெல்த் காலனி, விமான நிலையம் பகுதியில் உள்ள கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட இடங்களில், வீதிகளில் வெள்ளம் புகுந்தது.

திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள பெரிய குளமான மாவடி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருச்சி புறநகரில் திருவெறும்பூர் அண்ணாநகர், நவல்பட்டு, துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

குறிப்பாக BHEL காவல் நிலையம் தண்ணீரால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும், துறையூர், அந்தநல்லுார், கம்பரசம்பேட்டை, மணப்பாறை பகுதிகளில் பல இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள நேஷனல் கல்லூரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறும் இடத்திற்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் R. ராஜலட்சுமி இன்று காலை 10.15 மணியளவில் நேரில் வந்து பார்வையிட்டார்.

மோட்டார் மூலம் உறிஞ்சி வெள்ள நீரை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! இது பெரும் சவாலான பணியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், மழைநீர் கழிவு நீருடன் கலந்து கட்டுக் கடங்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதிய வடிகால் வசதி இல்லாததுதான்.

இன்று( 14.12.2024) காலை முதல் இந்த செய்தி பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை திருச்சியில் மழை ஓய்ந்துள்ளது. இத்தோடு மழை நின்று போனால் திருச்சி தப்பிக்கும். ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலைமை உருவாகும்.

எனவே, பொதுமக்களும், அரசு நிர்வாகமும் விழிப்பாக இருப்பது நல்லது.

Leave a Reply