தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு இணைய அடிமைகளாக அனுப்ப முயன்ற சட்டவிரோத முகவரின் முயற்சியை சென்னையில் உள்ள குடியேற்ற பாதுகாவலர், தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முறியடிக்கப்பட்டது. சட்டவிரோத முகவரும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.
கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்து பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சட்டபூர்வ குடியேற்ற நடைமுறைகளை தவிர்த்து சட்டவிரோத வழியில் இளைஞர்களை சுற்றுலா விசாவில் பயணிக்க அவர் தூண்டினார். அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் முகவரின் மோசடியான அறிவுரைகளின் தன்மையை அறிந்துகொண்டு தானாக முன்வந்து வெளிநாடு செல்லும் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மற்ற இரண்டு இளைஞர்களும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் அமர்வதற்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தாங்கள் பணியமர்த்தப்படும் வேலையின் உண்மைத் தன்மையை அறிந்ததும், அந்த இரு இளைஞர்களும் வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட முடிவு செய்தனர்.
இது குறித்து உளவுப் பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், குடியேற்ற பாதுகாவலர், சென்னை காவல்துறை, சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக திருச்சியில் அந்த சட்டவிரோத முகவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிவதற்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திவாஹர்