ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு, குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.

ஆர்மீனிய நாடாளுமன்றத் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையிலான ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது.

குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா – ஆர்மீனியா இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்புகளையும் தற்கால உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.

உலகளாவிய  அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் ஆர்மீனியா உறுப்பினர் ஆவதற்கும், மூன்று உலகளாவிய தெற்கு உச்சிமாநாடுகளிலும் ஆர்மீனியா பங்கேற்றதற்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

 ஆர்மீனியாவில் திறன் மேம்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க இந்தியாவின் உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேம்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

இருதரப்பும் மற்றவரின் ஆளுகை முறைகள், சட்டங்கள் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான வழக்கமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழுவின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Leave a Reply