இந்தியா – இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு.

1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவுக்கு அந்நாட்டு அதிபர் திரு திசாநாயக தனது நன்றியைத் தெரிவித்தார்.  இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கை, ‘சாகர்’ கடல்சார் தொலைநோக்குக் கொள்கை ஆகியவற்றில் இலங்கை சிறப்பான இடத்தை வகிப்பதாகவும், இதில் இந்தியா முழு உறுதியுடன் ஆதரவு வழங்கும் என்றும் இலங்கை அதிபர் திரு திசாநாயகவிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

4. கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு உறவுகள் ஆழமடைந்துள்ளதாகவும், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பரஸ்பரம் பயனளிக்கும் விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அரசியல் பரிமாற்றங்கள்:

5. கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தலைமை மட்டத்திலும் அமைச்சர்கள் மட்டங்களிலும் உரையாடல்களை மேலும் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

6. ஜனநாயக மாண்புகளை ஊக்குவிப்பதற்கும், சிறந்த நடைமுறைகள் குறித்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கும் வழக்கமான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.

வளர்ச்சி ஒத்துழைப்பு:

7) இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியாவின் உதவி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவை இலங்கை அதிபர் பாராட்டினார்.

8. மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த நெருக்கமாக பணியாற்ற தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் இரு தலைவர்களும் உறுதி செய்ததுடன் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்:

i. இந்திய உதவியுடனான வீடுகள் கட்டும் திட்டம், சமூக வளர்ச்சித் திட்டங்கள் போன்ற தற்போதைய திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க ஒன்றிணைந்து பணியாற்றுதல்;

ii. இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்மயமாக்கல் ஆகியவற்றுக்கான திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கு முழு ஆதரவை வழங்குதல்;

iii. இலங்கை அரசின் தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி ஒத்துழைப்புக்கான புதிய திட்டங்களை அடையாளம் காணுதல்.

பயிற்சி, திறன் மேம்பாடு:

9.  இலங்கையில் பல்வேறு துறைகளில் தனித்துவமான பயிற்சி:

i. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் 1500 இலங்கை சிவில் ஊழியர்களுக்கு பயிற்சியை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

ii. இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப சிவில், பாதுகாப்பு, சட்ட துறைகளில் இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குதல்.

கடன் மறுசீரமைப்பு:

10. அவசரகால நிதி, 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய செலாவணி ஆதரவு உட்பட பல்முனை உதவிகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவுக்காக இலங்கை அதிபர் திசநாயக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

11. கடன் அடிப்படையிலான மாதிரிகளிலிருந்து பல்வேறு துறைகளில் முதலீடு சார்ந்த ஒத்துழைப்புகளை நோக்கிய உத்திசார் மாற்றம், இலங்கையின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கான நிலையான பாதையை உறுதி செய்யும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

Leave a Reply