மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று (21.12.2024) புதுதில்லியில் காணொலிக் காட்சி மூலம் 100 நாள் தீவிர காசநோய் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு கோரும் வகையில் மாநில முதலமைச்சர்கள், சுகாதார அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார். மாநில முதலமைச்சர்கள் / யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுக்கு, இந்த இயக்கத்தின் கண்ணோட்டம், அதன் நோக்கங்கள், மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள், இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பங்கு ஆகியவை குறித்து விளக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், முதல்வர், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, முதல்வர், திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா, உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த அளவில் இந்த இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு நட்டா வலியுறுத்தினார். தேசிய அளவில் எடுக்கப்பட்ட அணுகுமுறையைப் போலவே, இந்த இயக்க நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் காசநோயால் ஏற்படும் இறப்புகள் 21.4 சதவீத அளவுக்கு கணிசமாகக் குறைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். காசநோய் பரிசோதனை, பரிசோதனை, நோய் கண்டறிதல் சோதனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், அந்தந்த மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் இந்த இயக்கத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு வலியுறுத்தினார்.
மாநிலங்களில் ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு மாத காசநோய் மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 மாத காசநோய் மருந்துகளை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். காசநோயை ஒழிக்க சம்பந்தப்பட்ட அனைவரும் மீண்டும் உறுதியேற்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஜே.பி. நட்டா கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் 347 முன்னுரிமை மாவட்டங்களில் காசநோய் பாதிப்பு, இறப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 100 நாள் இயக்கத்தின் கண்ணோட்டம் இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
காசநோய் இயக்கத்தில் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதலமைச்சர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய தங்கள் ஆதரவை அளிப்பதாகவும் உறுதியளித்தனர்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆராதனா பட்நாயக், மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநிலங்களைச் சேர்ந்த தேசிய சுகாதார இயக்க இயக்குநர்கள் (NHM) உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திவாஹர்