திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

 மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தலைமையில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கூட்ட அமர்வு இன்று (21.12.2024) நடைபெற்றது. மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி நல்லு, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா, மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மேகாலயாவின் சமூக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகள் வடகிழக்கு பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். இந்தப் பிராந்தியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் கவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் மாற்றம் ஏற்படுட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில், வடகிழக்குப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ளதால், சிக்கல்கள் குறைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, இந்தப் பிராந்தியத்துக்கும் தில்லி மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பணியாற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, மத்திய அரசின் முன்னுரிமையாக மாறியது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

வடகிழக்கில் பல்வேறு வகையான வனவிலங்குகள், நீர் ஆதாரங்கள் உள்ளன என்று  அமைச்சர் கூறினார். இந்த இயற்கை பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், இப்பகுதியை விருப்பமான சுற்றுலாத் தலமாக மாற்றவும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டும் மிக முக்கியமான பணியை அரசு நிறைவேற்றியுள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பல அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும்  10574 ஆயுதமேந்திய இளைஞர்கள் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இது வடகிழக்கில் அமைதியைக் கொண்டு வந்துள்ளதுடன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதி ‘அஷ்டலட்சுமி’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்தை ஒட்டுமொத்த நாடும் உலகமும் இப்போது ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் போது, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கு அமைச்சகம் நிறுவப்பட்டது என்று திரு அமித் ஷா சுட்டிக் காட்டினார்.

Leave a Reply